வெள்ளி, 17 ஜூலை, 2015

திருமா-சீமான் மோதல்: தமிழ்த் தேசியத்தின் சாதியப்போக்கை காட்டுகிறது.

                                                                                                 -ஸ்டாலின் தி

குமுதம் ரிப்போர்ட்டர் (21-7-2015) இதழில் திருமா-சீமான் மோதல் என்னும் தலைப்பிட்ட செய்திக்கட்டுரை வந்துள்ளது. ஜூலை 13 இல் சென்னையில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் சாதியப்படுகொலைக்குறித்து விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பேசிய சிறப்புரையை மய்யமாகவைத்தே இக்கட்டுரை வந்திருக்கிறது. சீமானும் திருமாவின் உரையைக்குறித்து இக்கட்டுரையில் பேசியுள்ளார்.

திருமாவின் உரையில் முக்கியமான கருத்துக்களைப் பார்ப்போம். "பெரியார் என்ங்கள் சமூகத்திற்காக உழைத்திருக்கலாம், அம்பேத்கர் எங்களுக்காக தியாகம் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் தமிழரில்லையே? எனக்கேள்வியெழுப்புகிறார்கள்" என்கிறார் திருமா. இதை பெங்களூரு குணா துவங்கி இந்த சீமான் வரை சொல்லித்தான் வருகிறார்கள். "அம்பேத்கர் எங்களுக்கு தலைவனாக முடியாது" போகுமிடமெல்லாம் பேசிக்கொண்டிருப்பவர்தான் சீமான். மணியரசன் என்னும் ஒரு மனக்கோளாறுபிடித்த தமிழ்த்தேசிய தலைவன் அண்ணலை 'இந்துத்துவவாதி' என்று புத்தகமே எழுதி வெளியிட்டார். ஜாதியை வெளிப்படையாக பேசுபவன் அண்ணலின் சிலையை உடைக்கிறான்;தமிழுக்குள் ஒளிந்து பேசுபவன் அண்ணலை அவதூறு செய்கிறான்,புறக்கணிப்பு செய்கிறான். சீமான் முன்பு 'அம்பேத்கர் வடநாட்டு பெயர்.அதை தமிழ்நாட்டில் யாரும் வைக்கக்கூடாது' என்று சொல்லியபோதே கடுமையான எதிர்வினையாற்றிருக்கவேண்டும். அண்ணலின் பெயரை சூட்டிக்கொள்வது தலித்துகள்தான் என்பதை சீமான் அறிந்தேதான், தலித்துகள் எந்தப்பெயரை வைக்கலாம் வைக்கக்கூடாது என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஜாதி இந்துவுக்கே இருக்கிறது என்கிற ஜாதியவெறிதான் சீமானின் அந்த விசமப் பேச்சுக்கு காரணம்.
"இனக்கலப்பு, சாதிக்கலப்பு, மொழிக்கலப்பு என்பவை மானுட இயற்கை. எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்துடன் கலக்கக்கூடாது என்பது எதேச்சதிகாரம். அதுதான் ஹிட்லரிசம்.அதுதான் பாசிசம்" என்று கூறும் திருமா அதுதான் 'தமிழ்த்தேசியம்' என்றும் கூறியிருக்கவேண்டும். இனக்கலப்பு,சாதிக்கலப்பு,மொழிக்கலப்பு எல்லாவற்றுக்கும் நேரெதிரானதுதான் தமிழ்தேசியம். இன்னமும் தமிழ்நாட்டின் ஊர்த்தெருவும் சேரியும், சுடுகாடுகளுமே இதற்கான ஆதாரங்கள்.

"இனத்தூய்மையும் சாதித்தூய்மையும் ஆபத்தானவை. இதை உணர்ந்து களமாடுவோம்" என்கிறார் திருமா. சரியான பாதைதான். ஆனால் தமிழ்தேசியத்தை முற்றிலுமாக விட்டுவெளியேறினால்தானே சாத்தியம். இனத்தூய்மையற்ற தமிழ்தேசியம் எப்படி சாத்தியமாகாதோ அப்படித்தான் தமிழ்த்தேசியம் இனத்தூய்மைவாத்தை ஒழிக்காது. சீமானின் தமிழ்த்தேசியம் மட்டுமல்ல பிரபாகரனின் தமிழ்த்தேசியமும் ஹிட்லரிசம்தான் என்பதை விடுதலைச்சிறுத்தைகள் உணர்ந்து களம்காணவேண்டிய கட்டாயமிருக்கிறது என்பதை திருமா உணரவேண்டும்.

இதேக்கட்டுரையில் திருமாவிற்கு பதிலாக வந்துள்ள சீமானின் சிலக் கருத்துக்களையும் பார்த்துவிடுவோம். "தமிழன்தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்பது எங்களது பிறப்புரிமை" என்கிறார் சீமான். தமிழன் என்று இவர் சொல்வது தமிழை மொழியாகக்கொண்ட ஜாதி இந்துக்களைத்தான் என்பது வெளிப்படை. ஜாதியை செல்வாக்காக வைத்துக்கொண்டு அதன்மூலம் தமிழக நிலங்களை, வளங்களை வளைத்துப்போட்டு, 20 சதவீத தலித் மக்களை ஒடுக்கி, அவர்களின் உழைப்பைச் சுரண்டி,அவர்களை மனிதர்களாகவே ஏற்காத ஜாதிவெறிக் கும்பலுக்குத்தான் சீமான் தமிழன் பெயரில் ஆட்சி அதிகாரத்தைக்கேட்கிறார்.

"சாதியவாதத்தைவிட இது(தூய்மைவாதம்) ஆபத்தானது என அண்ணன்(திருமா) சொல்கிறார். பரவாயில்லை, அப்படி ஆபத்தாக இருந்தால்கூட அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்" என்று கூறும் சீமானை நாம் குறைச்சொல்லலாமா? அவரின் தமிழ்த்தேசியத்தைக் குறைச்சொல்லலாமா? சீமானும் தமிழ்த்தேசியமும் வேறுவேறு அல்லதான். ஆனால் சீமானோ தானும் திருமாவும் வேறுவேறல்ல என்கிறார். "இன்னைக்கு நாங்க வீரியமாக பேசுகிற இந்தக்கருத்தை எங்களிடம் விதைத்ததே அண்ணன் திருமாவளவன் போன்றவர்கள்தான். படம் எடுத்துக்கிட்டிருந்த என்னைக்கூட்டிக்கொண்டுவந்து பக்கத்துல உட்காரவைத்து மண்டைக்குள் ஏத்துனது இவங்கதான். "சில வந்தேறிகள் இந்த நாட்டை ஆளத்துடிக்கிறார்கள் எனப் பேசியது அண்ணன் தான்" என்று சீமான் இந்த கட்டுரையில் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார்.   

நாம் சொல்வதைத்தான் சீமானும் சொல்கிறார்.தமிழ்த்தேசியத்துக்கு ஒரே முகம்தான். சீமான் பேசும் தமிழ்தேசியம் வேறு, திருமா பேசும் தமிழ்த்தேசியம் வேறு என்பது சரியான விளக்கமல்ல. சீமான் பேசும் தமிழ் தேசியம் தவறென்றால் திருமா பேசும் தமிழ்தேசியமும் தவறுதான். சீமானின் தமிழ்தேசியம் ஹிட்லரிசம் என்றால் பிரபாகரனின் தமிழ்தேசியமும் ஹிட்லரிசம்தான். ராமதாசின் சாதித்தூய்மையும் சீமானின் தமிழ்த்தூய்மையும் ஒன்றுதான் என்றால் ராமதாசும் பிரபாகரனும் ஒன்றுதான்.

கருத்துகள் இல்லை: